2020ஆம் ஆண்டு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில், புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் உறுதியான போராட்டத்தை கண்டு பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், வேளாண் சங்கத்தின் முன்னணி தலைவரான ராகேஷ் திகாயத் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திகாயத், "அடிப்படை ஆதார விலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இப்போது இல்லை என்றால் எப்போதும் இந்தக் கோரிக்கை நிறைவேறாது.
இந்த சூழலில் டிசம்பர் 4ஆம் தேதி சம்யுக்த கிசான் மோர்சா வேளாண் அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. இதில் எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.
விவசாயிகளை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. அடிப்படை ஆதார விலையை உறுதி செய்யாதவரை போரட்டத்தை கைவிட விவசாயிகள் தயாராக இல்லை" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விசில் அடித்ததும் பறந்துவரும் வௌவால்கள்; பழங்கொடுத்து பசி தீர்க்கும் புதுச்சேரிக்காரர்!