டெல்லி : தேசத் துரோக சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையை பெற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு குறித்த விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச விரோத சட்டம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தால் கருத்தியல் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாதிப்படைவதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேச துரோக சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்குத்தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை மேற்கொள்ளும் வரை, தேசத் துரோக 124 A என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும்; உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேசத்துரோக சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறினார். மேலும் தேசத் துரோக சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனை செயல்முறை அடுத்தகட்ட நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
விவகாரம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும் முன் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்படும் என்றும்; நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடருக்கு பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு தெரிவித்தார். முன்னதாக இந்த வழக்கின் விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உத்தரவிடுமாறும் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசத் துரோக சட்டப்பிரிவு கடந்த 1870ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறப்பு மசோதா இயற்றப்பட்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்களே பின்னாட்களில் இந்த சட்டத்தை ரத்து செய்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு பிரிட்டனில் தேச விரோதச் சட்டத்தில் அந்நாட்டு அரசு பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில் காலனித்துவ காலச் சட்டம் கடைபிடிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் தேச விரோத சட்டப்பிரிவில் வழக்குகளைப் பதிவு செய்ய தற்காலிகத் தடை விதித்தது.
இதையும் படிங்க : மகளைத் திருமணம் கட்டித் தருவதாக நூதன மோசடி - வரதட்சணை பெற்று டாட்டா காட்டிய தந்தை கைது!