டெல்லி: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி செப்டம்பர் 30-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கணக்கெடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் கட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பதற்கான பணி ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையடுத்து இந்தியப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலங்களின் நிர்வாக எல்லைகளை நிர்ணயிக்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிமுறைகளின்படி மாநிலங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னரே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு மாநிலமும் அங்குள்ள மாவட்டங்கள், துணை மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற நிர்வாக அலகுகளின் வரம்புகள் குறித்து நிர்ணயிக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஆணையம் மூலம் டிசம்பர் 31 தேதி வரை எல்லைகளை நிர்ணயிக்கக் காலக்கெடு வழங்கப்பட்டது. இதனையடுத்து எல்லைகளை முடக்கும் தேதியை மேலும் நீட்டிக்கத் தகுதியான அதிகாரியால் முடிவு செய்யப்பட்டு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நிர்வாக அலகுகளின் எல்லைகள் வரும் ஜூலை 1, 2023 முதல் நிர்ணயிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிர்வாக எல்லைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்தலாம் எனவும், மாநில அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்திற்கு டெல்லி மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின்னர் அதிகார வரம்பு மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளின் நகல்களை அனுப்பலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:என்எல்சி நிறுவனத்தின் புதிய தலைவராக பிரசன்ன குமார் நியமனம்