டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லி அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதில் ஜிஎன்சிடிடி (GNCTD) இன் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக, டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26அன்று சிபிஐ கைது செய்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி, திஹார் சிறையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
முன்னதாக டெல்லியின் ஜோர் பாக் மதுபான விநியோகஸ்தர் இண்டோஸ்பிரிட் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான சமீர் மகேந்துரு இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 36க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, தனது முதல் குற்றப்பத்திரிகையை இந்த வாரம் தாக்கல் செய்தது.
அதேநேரம் திருத்தி அமைக்கப்பட்ட மதுபானக் கொள்கைகள் மூலம் உரிமம் பெற்றவர்களுக்கு ஆதரவாகவும், உரிமம் பெற செலுத்த வேண்டிய தொகையில் சலுகை வழங்கியதாகவும், தொகையை குறைத்ததாகவும் மற்றும் எல் - 1 உரிமத்தை தகுதியான அதிகாரி இன்றி அனுமதித்தது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, சட்டவிரோதமான ஆதாயங்களை அரசு தரப்பினருக்கு தனியார் தரப்பினர் வழங்கி, அவர்களது கணக்குகளில் தவறானப் பதிவை உருவாக்கியதாகவும் சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறி இருந்தார்.
இந்த நிலையில்தான், இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வு குழுவிடம் பதில் அளிப்பதற்காக நாளை மறுநாள் (ஏப்ரல் 16) சிபிஐ தலைமை இடத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான், ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்.3 வரை நீட்டிப்பு