ராஞ்சி (ஜார்கண்ட்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ் 1990ஆம் ஆண்டுமுதல் 1997ஆம் ஆண்டுவரை இருமுறை பிகார் மாநில முதலமைச்சராக இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்தபோது கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதில் 950 கோடி ரூபாய் அரசு கருவூலத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவருக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக தற்போது பிணையில் உள்ளார்.
தண்டனை விவரம்
இந்தநிலையில், ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு, டொராண்டா கருவூலத்திலிருந்து ரூ.139 கோடி சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் தண்டணை விவரத்தை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 21) வாசித்தது. அதன்படி, லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊழல் தொடர்பான 6ஆவது வழக்கின் விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஜ்ரங் தள் ஆர்வலர் கொலை - ஷிவமொக்காவில் 144 தடை!