டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்த காதலரால் கொல்லப்பட்டு, 35 துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷ்ரத்தாவின் காதலர் அப்தாப் அமீன் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்தாப் பூனாவாலாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததில் பல்வேறு உண்மைத் தகவல்கள் வெளியாகின. அப்தாப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார் 13 எலும்புத் துண்டுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.
டி.என்.ஏ. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை ஷ்ரத்தாவின் எலும்புகள் எனத் தெரிய வந்தன. மெஹ்ராலி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டின் மரபணுவும், ஷ்ரத்தாவின் தந்தையுடைய மரபணுவும் ஒத்துப்போவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அப்தாப் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை அப்தாப் வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், ஷ்ரத்தா வாக்கர் ஆவேசமாக ஒருவருடன் பேசும் ஆடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆடியோவில் உள்ள ஆண் குரல் அப்தாபினுடையதா என ஆராயும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக திகார் சிறையில் இருந்த அப்தாப் பூனாவாலாவை, மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அப்தாபின் குரல் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆடியோவில் உள்ள குரலும், அப்தாபின் குரலையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை முடிவுகள் வெளியானதும் வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!