டெல்லி: ஆளுநர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி வாங்கித் தருவதாகக் கூறிய ஒரு கும்பல், பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. புகாரின்படி, மகாராஷ்டிரா மாநிலம் லட்டூரைச் சேர்ந்த கமலாக்கர் பிரேம்குமார் பந்த்கர், கர்நாடகா மாநிலம் பெல்காமைச் சேர்ந்த ரவிந்திரா வித்தால், டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா, அபிஷேக்போரா, முகமது அஜாஸ் கான் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் சிபிஐ அதிகாரிகளை தாக்கவிட்டு தப்பியோடிவிட்டார். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பந்தர்கர் என்பவர் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டதாகவும், தான் ஒரு சிபிஐ அதிகாரி எனக் கூறி, பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
தனக்கு உயர் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து ஆளுநர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவிகளை வாங்கித் தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற மூவரும் பிரேம்குமாருக்கு முகவர்களாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இவர்கள் தனிநபர்களை குறிவைத்து, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:புனேவில் பயிற்சி விமானம் விபத்து... பெண் விமானி காயம்...