புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (டிச.03) நான்காம்கட்டப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதற்கிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தின் பொருளாதாரத்திலும் தேசியப் பாதுகாப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்னையில் மத்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவுடனான சந்திப்புப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், "விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நானோ எனது அரசோ மத்தியஸ்தம் செய்யவில்லை. அவர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனை கருத்தில்கொண்டு இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்" என்றார்.
மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசி வருகிறது. இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தளக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன.