கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவிவரும் நிலையில், புதுச்சேரி அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
காவல் துறையினர் ஆலோசனைக் கூட்டம்
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல இடங்களில் சமூக விரோதிகள் இருசக்கர வாகனங்கள் திருட்டு, வழிபறி, கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே, இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி காவல் துறை இணை இயக்குநர் ஆனந்த மோகன், நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் எதிரொலியாக, தெற்கு பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் தனச்செல்வம் தலைமையில் தவளக்குப்பம் காவல் நிலையம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் 14) மாலை, தவளக்குப்பம் காவல் துறை சரகத்திற்குட்பட்ட தானாம்பாளையம் ராஜீவ்காந்தி அரசு கலை கல்லூரி அருகில் இருவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனை
இதையடுத்து காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி, பாலாஜி என்பதும், இப்பகுதியில் சில நாள்களாக கஞ்சா, போதைப் பொருள்களை அவர்கள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.