பெங்களூரு : கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (செப். 22) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டம் மாலை 6 மணி அளவில் விதான் சவுதாவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையிட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் கை கழுவியதால் கர்நாடக அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் இன்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. அதேநேரம், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த கர்நாடக விவசாயிகள் மற்றும் ஒரு சில அமைப்புகள் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஏனென்றால் கே.ஆர்.எஸ் நீர்தேக்கம் வறண்டு விட்டதாகவும், தமிழ்நாட்டிற்கு நீர் கொடுத்தால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போய் விடும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசானது நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் அதை கட்டுபடுத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறாப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்தும் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், இந்த வறட்சி குறித்து மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்கப்படுவதாகவும், தசரா குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த விண்ணப்பமும், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதலாக தண்ணீர் கேட்டு தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான குழு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசினர். அப்போது அமைச்சர் சாதகமாக பதிலளித்தார் என கர்நாடக முதலமைச்சர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ம.பியில் 108 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை திறப்பு!