கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இடைத்தேர்தல்
பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினரான சோபந்தேவ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் சம்சேர்கஞ்ச் மற்றும் ஜாக்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கபட்டது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று (செப்.30) இம்மூன்று தொகுதிகளிலும் அமைதியான முறையில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
குறைவான வாக்குப்பதிவு
இம்மூன்று தொகுதிகளிலும் மாலை ஐந்து மணி வரை, 69.31 விழுக்காடு வாக்குகள் பதிவானது. அதாவது பவானிபூர் பகுதியில் 53.32 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் சம்ஷேர்கஞ்ச் தொகுதியில் 78.6 விழுக்காடும், ஜாங்கி பூரில் 76.12 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்த போதிலும், இடையில் சில இடங்களில், வன்முறை செயல்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இடைத்தேர்தல் நடக்கும் இம்மூன்று தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மொத்தம் இரண்டாயிரத்து 500 காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.