கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார், டாக்ஸிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து கேரளாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், ‘கேரளாவின் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் குறைந்த கட்டணமாக ரூ. 8. இருந்தது. தற்போது இது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆட்டோ கட்டணமும் ரூ.30 என உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு குறைவாக இருந்த அனைத்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. டாக்ஸி கட்டணம் குறைந்தது ரூ.175 ஆக இருந்தது. தற்போது அது ரூ. 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் பேருந்தையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் சலுகை விகிதம் குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் KSRTC-இல் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம்: ஆந்திரப்பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத்துறையில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் செஸ் வரியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற பேருந்துகள் மற்றும் நகர்ப்புறங்களின் பொதுபோக்குவரத்தைத் தவிர, மற்ற போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
இது குறித்து ஆந்திர போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர் துவராகா திருமலா கூறுகையில், ’கடந்த டிசம்பர் 2019 முதல் 2022 ஏப்ரல் வரை டீசலின் விலை ரூ.67இல் இருந்து ரூ.107ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் அரசு பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தற்போது அரசின் நிதிப்பற்றாக்குறையால் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளது’ எனத்தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா