நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நகரங்களில் வாழும் மக்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறுகையில், "அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு என 1.97 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணியில் போக்குவரத்தை மேம்படுத்த 20,000 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன" என்றார். அதேபோல், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் திட்ட வரிவாக்கத்திற்கு என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
- கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 1957 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 11.5 கிமீ விரிவுப்படுத்தப்படவுள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 118.9 கிமீ தொலவு விரிவுப்படுத்தப்படவுள்ளது.
- 58.19 கிமீ விரிவுப்படுத்தப்படவுள்ள பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 14,788 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நாக்பூர் - நாசிக் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 5976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் தற்போது 702 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவருகிறது. அதேபோல், 27 நகரங்களில் 1016 கிமீ தொலைவுக்கு விரைவு ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. சிறிய நகரங்களில் மெட்ரோ லைட், மெட்ரோ நியோ தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்.