தன்டேவாடா : சத்தீஸ்கரில் தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர், மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும், இராண்டம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சத்தீஸ்கர் அரசியல் களம் பயங்கரமாக சூடிபிடித்து உள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் தன்டேவாடா உள்ளிட்ட 20 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை (நவ. 7) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு தன்டேவா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லை பாதுகாப்பு படையின் 70வது பட்டாலியனை சேர்ந்த பல்பீர் சந்த் என்ற வீரர் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தார். கேட்கல்யான் காவல் நிலையத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணிக்காக வெளியேறிக் கொண்டு இருந்த போது, பல்பீர் சந்த் அணிந்திருந்த சீருடையில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பல்பீர் சந்த் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்களை அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பல்பீர் சந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தன்டேவாடா உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் வீரர்களுக்கு முன்னெச்சரிக்கைக்காக வெடிகுண்டுகள் வழங்கப்படுவதாகவும், அப்படி வழங்கப்பட்ட வெடிகுண்டு தவறுதலாக வெடித்து பல்பீர் சந்த் உயிரிழந்ததாகவும் போலீசார் முதற்கட்ட தகவலை தெரிவித்து உள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படை வீரர் பல்பீர் சந்த் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்து உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : அசாமில் மசூதியில் வைத்து இமாம் படுகொலை... போலீசார் தீவிர விசாரணை