புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை சார்பில் டாக்டர் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம், காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் திமுக அமைப்பாளரும் எம்பியுமான ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அப்போது அவருடன் சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, "காமராஜர் தமிழ்நாட்டில் முதன்முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாட்டில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கலைஞர். காவிரி நீர் பிரச்னையில் புதுச்சேரிக்கு உதவியவர் கலைஞர்" என புகழாரம் சூட்டினார்.
பின்னர் எம்பி ஆர்எஸ் பாரதி பேசியதாவது, "கலைஞர் கருணாநிதிக்கும் புதுச்சேரிக்கும் நல்ல தொடர்பு உண்டு. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை திமுக அமல்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: மதிய உணவு திட்டத்துக்கு இந்தியா ஏன் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் - அவனி கபூர் & ஷரத் பாண்டே