மும்பை - கோவாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமெச்சா ஆகியோரும் அடக்கம்.
ஆர்யன் கானுக்கு பிணை
இதையடுத்து, ஆர்யன் கான் உள்பட மூவரும் போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, மூவரின் தரப்பும் பிணை வழங்கக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏறத்தாழ 22 நாள்களுக்குப் பின்னர், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மூவருக்கும் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி ஆர்யன் கான் விடுதலையானார்.
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி நிதின் சாம்ப்ரே வழங்கிய 14 பக்க ஜாமீன் உத்தரவின் விவரம், தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் ஏன் வழங்கப்பட்டது என்ற விவரம் இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் இல்லை
அதன்படி, 'ஆர்யன் கான், முன்முன் தமெச்சா, அர்பாஸ் மெர்சன்ட் ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான முதன்மை சாட்சி இல்லை.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஒரே கப்பலில் பயணம் செய்ததால் மட்டுமே அவர்களுக்கு எதிராகப் பிரிவு 29 (குற்றச் சதி)இன் கீழ் குற்றம் சுமத்த முடியாது.
விசாரணை அலுவலர் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம், ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இணைக்கப்படவில்லை. எனவே, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அறிக்கையை நம்ப முடியாது. வாட்ஸ்அப் சேட்டிலும் சந்தேகத்துக்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தனித்தனியே தான் பயணித்துள்ளனர். என்சிபி வாதிட்டபடி, இவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கறுப்பாக இருப்பதாகக் கூறி மனைவிக்கு ’முத்தலாக்’ : கணவர் மீது வழக்குப் பதிவு