புதுச்சேரி மாநில பாஜக கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரணா, பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சுவாமிநாதன் கூறியதாவது, “பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை சுற்றுலா, ஆன்மிகம், கல்வி, வணிகம் என அனைத்தும் துறை மேம்பாட்டுக்காக அந்தந்தத் துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து, அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துகேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தற்போதுள்ள கருத்துக்கணிப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் 30-க்கு 30 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும்” என்றார்.
மேலும், பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக, என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியுடனும் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசிவருகிறோம்.
இதனால், காலதாமதம் ஏற்படத்தான் செய்யும். கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும்” என சுவாமிநாதன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ராகுல் பரப்புரைக்குத் தடை கோரி பாஜக கடிதம்