மேற்கு வங்கத்தில் நான்கு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 17ஆம் தேதி 45 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதன்முறையாக வடக்கு தினாஜ்பூர் மாவட்டம், கோவல்போக்கர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மேற்கு வங்கத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்க பாஜக முயல்கிறது. அஸ்ஸாமிலும், தமிழ்நாட்டிலும் இதைத்தான் பாஜக செய்கிறது. வெறுப்புணர்வு, வன்முறை, பிரித்தாளும் அரசியல் ஆகியவற்றைத்தான் பாஜகவால் தரமுடியும். மக்களை மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் பிரித்து வருகிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் தலைவர்களும் நானும் கூட்டாக பிரதமரைச் சந்தித்து கரோனாவால் கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகிறோம் என்று எச்சரித்தோம். பொருளாதாரம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு அளவிலான தொழில்களைக் காப்பாற்ற நீங்கள் தயாராக வேண்டும் எனக் கூறினோம். பிரதமர் மோடியும், பாஜகவினரும் எங்களைக் கேலி செய்தனர். விளைவு, பேரழிவு ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தட்டு, பாத்திரங்களைத் தட்டுங்கள் கரோனா ஓடிவிடும் எனக் கூறினார். அதன் பிறகு விளைவுகளை உணராமல் மக்களை மொபைல் போன்களை எடுத்து டார்ச் லைட் அடிக்கச் சொன்னார்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ஹர்ஷ் வர்தன்