டெல்லி: 182 உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம் ஆம்ஆத்மியின் வருகையும் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், முதலமைச்சர் பூபேந்திர படேல், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது கட்லோடியா தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அண்மையில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்திக் படேலுக்கு வீரம்காம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா, குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர்.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இதுபோன்ற 'பழிவாங்கும் அரசியல்' நாட்டில் கண்டிராதது: சஞ்சய் ராவத் ஆதங்கம்