கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. அடுத்தக்கட்ட தேர்தல், டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருவதால் இது தேர்தல் விதிமீறல் என பாஜகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த புகார்கள் குழந்தைத்தனமாக உள்ளது என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் எம்எம் ஹுசைன், "டிசம்பர் 14ஆம் தேதி, நான்கு மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த அறிவிப்பானது தேர்தல் விதிமீறலாகும்" என்றார்.
பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன் அளித்த புகாரில், "கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு வாக்காளர்களை கவர முதலமைச்சர் முயற்சிக்கிறார்" என குறிப்பிட்டிருந்தார்.