புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் ஏழாம் தேதி பதவியேற்றார்.
இரு கட்சிகளும் சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இரு கட்சிப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புகொண்டு பேசினார்.
அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேர், மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூன்று சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி கொடுப்பது என்பது தொடர்பாக, கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் இரு நாள்களாக ஆலோசித்து முடிவுசெய்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜுவ் சந்திரசேகர் பாஜக சார்பாக திலாஸ்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பட்டியல் கொடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் பாஜக தலைவர்கள் இடையே பதவி குறித்து முடிவு எட்டப்படாததால் இந்தப் பேச்சுவார்த்தையானது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்பு வெளியே வந்த பொறுப்பாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துச் சென்றார்.
இதன் காரணமாக அமைச்சரவை பதவி ஏற்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.