பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷியாம் பட் ஆகியோர் மீது பாஜக பிரமுகர் என்ஆர்.ரமேஷ், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த 2014ஆம் ஆண்டு சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது, பெங்களூரு சித்தாப்புரா பகுதியில் இருந்த அரசு நிலத்தை, சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் 200 கோடி ரூபாயை முறைகேடாக பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலைத்தை வாங்கியவர் அதில் கட்டிடம் கட்ட முயன்றபோது, அது அரசு நிலம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சித்தராமையா திட்டமிட்டு இந்த நில மோசடியை செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் ஷியாம் பட் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ அல்லது சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு என்ஆர்.ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு