டெல்லி: அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் வெப் சீரிஸ் தாண்டவ். சயீப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தத் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் இந்து கடவுள்களும், தெய்வங்களும் அவமதிக்கப்பட்டதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி விஜய் கோயல் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதன் இயக்குநரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசிய அவர், " இந்தத் தொடர் இந்து கடவுள்களை அவமதிக்கிறது. மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. நீதி அமைப்பு, காவல் துறை, பட்டியலின மக்கள, பிரதமர் என பலரும் வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மன்னிப்பு கடிதத்தை வெளியிடுவது மட்டும் போதாது. தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.
முன்னதாக பார்வையாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, தொடரின் இயக்குநர் பார்வையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்காக தொடரில் மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், எந்தவொரு சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு அல்ல.
இந்த விஷயத்தில் வழிகாட்டுதலையும் ஆதரவையும் அளித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நன்றி. இந்தத் தொடர் தற்செயலாக யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால் நாங்கள் மீண்டும் மன்னிப்பு கோருகிறோம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.