புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 20) நடைபெற்றது. அக்கட்சியின் தேர்தல் இணைப் பொறுப்பாளர் ராஜுவ் சந்திரசேகர் எம்பி, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
"புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் சந்தித்துள்ளது. மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவராமல் ஊழல் செய்வதில்தான் குறிக்கோளாக இருந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை 90 விழுக்காடு நிறைவேற்றாமல் காங்கிரஸ் கூட்டணி ஏமாற்றியுள்ளது.
பஞ்சாலைகளை மூடியது, அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் மூடி இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்தியது.
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் அம்மக்களை வஞ்சித்துள்ளனர்.
மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு வழங்கிய 15 ஆயிரம் கோடி, நிதி மாநில மக்களைச் சென்றடையவில்லை. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்ததால், அதன் விளைவாக மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி கிடைக்காததால் கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.
"புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க வரும் மார்ச் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்.
அன்று மாலை 4 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். மார்ச் 22ஆம் தேதி நிதின் கட்கரி வருகிறார். 24ஆம் தேதி அன்று நிர்மலா சீதாராமன் வருகைபுரிந்து, புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்" என்றனர்.
பின்னர்,புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி, அதன் ஆட்சிக் காலத்தில் செய்த குற்றங்களைத் தொகுத்து 'குற்றப்பத்திரிகை' என்ற புத்தகத்தை அம்மாநில பாஜகவினர் வெளியிட்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 489 பேர் வேட்புமனு தாக்கல்: ரங்கசாமி போட்டியிடும் தொகுதியில் 24 பேர் மனு தாக்கல்!