ஹைதராபாத்: இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (டிச.8) வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. மொத்தம் 68 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்ததாக ஆளும் பாஜக 25 இடங்களை பிடித்து தோல்வியைத் தழுவியுள்ளது.
இதில் காங்கிரஸின் வெற்றிக்கு, மறைந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்கை முன்னிலைப்படுத்தி அனுதாப வாக்கை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்ததாகத் தெரிகிறது. மேலும் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தியின் பேச்சு முக்கியப் பங்கை வகித்துள்ளது.
ஆளும் பாஜக அரசின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் ஆகிய பிரச்னைகளை 'மவுனப் பிரசாரம்' மூலம் காங்கிரஸ் பரப்புரை செய்தது. அதேபோல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதைச் செயல்படுத்தியதாக எடுத்துக்காட்டியது.
மேலும் ஆளும் மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்தையும் வாக்காளர்களிடையே எடுத்துரைத்தது. இது காங்கிரஸுக்கு பக்க பலமாக இருந்த நிலையில், பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. இங்கு பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய முக்கியப் பிரமுகர்களின் பிரசாரங்கள் தேர்தல் முடிவில் எதிரொலிக்கவில்லை என்பதுபோல தெரிகிறது.
அதிலும் பாஜகவைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள், தாங்கள் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைச் சந்தித்தனர். அது மட்டுமல்லாமல் அனுராக் தாகூரின் வெற்றி பாஜகவுக்கு உதவவில்லை என்பதும் ஒரு சங்கடமான நிகழ்வு. அதேநேரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலில் பாஜக தோல்வியைத் தழுவியது, அக்கட்சியின் உயர்மட்டக் குழு வரையில் எதிரொலித்துள்ளது.
இதனிடையே 15 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை இமாச்சலில் காங்கிரஸின் சவால்களாக உள்ளன.
இதையும் படிங்க: Himachal Election Result: இமாச்சலில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்!