பெங்களூரு: பசவராஜ் பொம்மையின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக காலையில் பாஜக தலைமையிடம் தெளிவான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் மதியம் அல்லது மாலைப்பொழுதில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களைச் சேர்த்து இறுதிப் பட்டியலுக்கு பாஜக தலைமை ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக பசவராஜ் பொம்மை டெல்லி சென்றிருந்தார்.
அங்கு பாஜகவின் உயர்மட்ட குழுவினருடன் பொம்மை விவாதித்தார்.
இதன் பிறகு அமைச்சரவை விரிவாக்கத்தின் இறுதிப் பட்டியலை அக்கட்சியின் தலைமை இறுதிசெய்ததாக பொம்மை தெரிவித்தார். மேலும், அவர் இந்த அமைச்சரவை விரிவாக்கம் பல்வேறு நிலைகளில் அடிப்படையில் நடைபெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
இருப்பினும் அவர் புதிய அமைச்சர்கள் யார் யார் என்ற ரகசியத்தைச் சொல்லவில்லை. இருப்பினும் புதிய அமைச்சர்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது. புதிய அமைச்சரவையில் ஆர். அசோக், ஸ்ரீராமுலு, சி.என். அஸ்வத் நாராயணன் ஆகியோருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த விஜயேந்திராவுக்கு (முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன்) துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்படலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. இருப்பினும், பசவராஜ் பொம்மை லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பி.ஒய். விஜயேந்திராவுக்குத் துணை முதலமைச்சர் பதவி கிடைக்காமலும் போகலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
அமைச்சரவை தற்காலிகப் பட்டியல் பின்வருமாறு:
- கே.எஸ். ஈஸ்வரப்பா,
- அரவிந்த் லிம்பாவலி,
- ஜே.சி. மதுசாமி,
- முருகேஷ் நிரானி,
- அரவிந்த் பெல்லாட்,
- பசன்கவுடா பட்டில் யாட்னல்,
- பாலச்சந்திரா ஜர்க்கிஹோலி,
- வி.ஏ. பசவராஜ்,
- எஸ்.டி. சோமஷேகர்,
- வி. சோமண்ணா,
- கே. சுதாகர்,
- கே. கோபாலய்யா,
- உமேஷ் கட்டி,
- பி. ராஜு,
- எஸ்.ஆர். விஷ்வநாத்,
- கே. பூர்ணிமா,
- பி.சி. பட்டில்,
- கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி,
- எம்.பி. ரேணுகச்சார்யா,
- எம்.பி. குமாரசாமி,
- எஸ். அங்காரா,
- தத்தாத்ரேயா சி. பட்டில் ரெவூர்,
- ஷிவானா கவுடா நாயக்,
- வி. சுனில் குமார்,
- ஜி.ஹெச். திப்பாரெட்டி,
- அரகா ஜினாந்திரா,
- சி.பி. யோகேஷ்வரா
முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 3) முதலமைச்சர் பொம்மை நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து இது குறித்து விவாதித்தார். 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை விரிவாக்கம் நல்லாட்சி அளிப்பதற்கு வித்திடும் என்று கூறுகிறார் பசவராஜ் பொம்மை.
எடியூரப்பா ஜூலை 26ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 28ஆம் தேதி பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'