லக்னோ : உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மிகப்பெரிய டிஜிட்டல் பேரணி நடத்த பாஜக ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தோன்றி பேசும் இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 50 லட்சம் பாஜக தொண்டர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணி மகர சக்கராந்திக்கு மறுதினம் (ஜன.15) நடக்கிறது. இந்தப் பேணிக்கு தேவையான ஏற்பாடுகளை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும், பிரதமரின் உரையை மக்கள் கேட்க ஏதுவாக 100 முதல் 200 பேர் கொண்ட சிறிய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து திரைகள் ஏற்பாடு செய்வது குறித்தும் அனுமதி கேட்கப்பட்டுவருகிறது.
இது குறித்து பேசிய பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “மகர சங்கராந்திக்குப் பிறகு சிறு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் பேரணியை சிறு கூட்டங்களில் மேடைகளை அமைத்து ஒலிபரப்புவோம். இது மக்களுக்கு பேரணியில் நேரடியாக கலந்துகொண்டது போன்ற அனுபவத்தை அளிக்கும். பிரதமரின் உரையை காணொலி மூலம் நாங்கள் உயிர்ப்பிப்போம்” என்றார்.
அண்மையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையில், நாட்டில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகள் காரணமாக, நேரடி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் பேரணி கூட்டங்கள் நடத்த பாஜக ஆயத்தமாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரதமர் நூற்றாண்டுகள் வாழ... யாகம் நடத்திய அண்ணாமலை