புபனேஸ்வர்(ஒடிசா): ஒடிசா மாநிலம், பாலாங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த 93 வயது முதியவர், கோபபந்து மிஸ்ரா. இவர் அண்மையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, கேஐஎம்எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று(ஜுன் 11) கோபபந்து மிஸ்ராவிற்கு 93ஆவது வயது ஆகியுள்ளது.
இதையறிந்த பாதுகாப்பு அலுவலர்களும் மருத்துவர்களும் கோபபந்து மிஸ்ரா சிகிச்சைபெறும் அறையை தோரணங்கள் கொண்டு அலங்கரித்தனர். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக பிபிஇ கிட் உடையணிந்து, கேக்குகள் சகிதமாக சென்று, மிஸ்ராவின் பிறந்த நாளைக் கொண்டாடி அவரை ஆச்சர்யப்படுத்தினர்.இதனால் கோபபந்து மனதளவில் உற்சாகம் அடைந்துள்ளார்.
சர்ப்ரைஸ் தந்த முன்களப்பணியாளர்கள்
இதுகுறித்து பாலாங்கீர் மாவட்டத்தின் ஆட்சியர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கோபபந்து மிஸ்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், ' தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.மிஸ்ரா 93 வயதைத் தொட்டுள்ளார். இதனால் கேஐஎம்எஸ் மருத்துவமனையின் மருத்துவர்களும் பணியாளர்களும் அவரது முன்னேற்றத்தை அதிகரிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
இதன்மூலம் அவரது உடலில் ஏற்பட்ட முன்னேற்றம் நம் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவிற்கு கடத்திய நபர் கைது