மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜ்ஜு, பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட முன்னணி பாஜக தலைவர்கள் மணிபூருக்கு சென்றனர். அவர்கள் முன்னிலையில் மணிப்பூர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த பிரேன் சிங், மணிப்பூர் பிராந்திய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். பின்னர், அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ ஆன அவர் அன்றைய முதலமைச்சரான ஒக்ரான் ஐபோபி சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார். சுமார் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் 2016ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை மணிப்பூரில் உருவாக்கி முதல் முறை முதலமைச்சரானார். இப்போது மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
இதையும் படிங்க: நவீனை உயிருடன் அழைத்துவர முடியவில்லை- மனம் வெதும்பிய கர்நாடக முதல் அமைச்சர்!