புவனேஸ்வர்: கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலங்களில் வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள பறவைகளை அழிப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டத்தையடுத்த பதபேரனா கிராமத்திலுள்ள கோழிப்பண்ணையில் நேற்று 700க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதாக, அக்கிராம அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் உயிரிழந்னவா என்பது குறித்து ஆய்விற்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறியுள்ளனர். தற்போதுவரை மருத்துவர்கள் ஆய்வு செய்ய வரவில்லை என அக்கோழி பண்ணை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பறவைக் காய்ச்சல் குறித்து பேசிய அம்மாநில தலைமை செயலாளர் சந்திர மோகபத்ரா, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட 11 ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் பரவல் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
பறவைக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பண்ணை விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அம்மாநில அரசு சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி பதவியேற்பு!