ஹைதராபாத்: இடம்பெயர்ந்து வந்த பறவைகளால் இந்தியாவின் 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. ராஜஸ்தானில் எக்கச்சக்கமான கழுகுகள் காக்கைகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த பறவைகளை சோதனை செய்த போபால் தேசிய விலங்கு ஆய்வகம், 2020 டிசம்பர் 31ஆம் தேதி பறவைக் காய்ச்சலை உறுதி செய்தது. இண்டோர், குஜராத், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், ஹரியானா என கண் இமைக்கும் நொடியில் பல்வேறு மாநிலங்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறவைக் காய்ச்சலால் கடந்த 2006 முதல் 2018 வரை 83 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன.
வேளாண் அமைச்சகத்தின் தகவல்படி நாட்டில் 73 கோடி கோழிகள், வாத்துகள் உள்ளன. கிராம பொருளாதாரத்தை பாதுகாக்க இவை உயிரிழக்காமல் பாதுகாப்பது அவசியமாகும்.
விலங்குகளுக்கான உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள தகவல்படி, கடந்த டிசம்பர் 4 முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை 14 நாடுகளில் உள்ள 74 இடங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு 862 நபர்களை பறவைக் காய்ச்சல் தாக்கியது. இதனால் 455 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மனிதர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. பறவைக் காய்ச்சல் நேரடியாக மனிதனை பாதிக்காது. அதன் உருமாறிய H5N1 மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும். ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோழிகளை நாம் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க மக்கள் முன்வர வேண்டும் என அரசால் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.