பிஸ்வநாத்: உலகின் மிக வயதான ஆசிய யானை என்று சாதனைப் படைத்த பிஜூலி பிரசாத் இன்று காலை மரணம் அடைந்தது. அந்த யானைக்கு வயது 90. சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையை வில்லியம்சன் மாகோர் டீ நிறுவனம் வாங்கியது. ஆலிவர் சாஹப் என்ற பிரிட்டிஷார் யானைக்கு பிஜூலி பிரசாத் என்று பெயரிட்டார். மாகோர் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினரான பிஜூலி பிரசாத், அதன் பின்னர் அந்நிறுவத்தின் அடையாளமாக மாறியிருந்தது.
யானை பிஜூலி பிரசாத், அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பிஸ்வநாத் உள்ள பார்கோன் தேயிலைத் தோட்டத்தில் வளர்ந்து வந்தது. அதன் பின்னர் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹாலி தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்தது. இன்றளவிலும் பிரிட்டிஷாரின் கண்காணிப்பில் இருந்து வந்த இந்த யானைக்கு வயது 90. யானை பிஜூலி பிரசாத்தை பராமரிப்பதற்காக பல பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
பிஜூலிக்கு ஒரு நாளைக்கு 25 கிலோ அரிசி, சம அளவு சோளம் மற்றும் சீசி பீன்ஸ் ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் ஒவ்வொரு வாரத்திற்கும் தேயிலைத் தோட்ட அதிகாரிகளால் விநியோகம் செய்யப்படும் வாழை பழங்களையும் உணவாகக் கொடுத்து வந்தனர். யானையின் உடல்நிலை குறித்த அறிக்கை தோட்டத்தின் தலைமையிடமான கொல்கத்தாவிற்கு அனுப்புமாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
யானை பிஜூலி பிரசாத்தை பராமரிப்பதற்காக ஆண்டுத்தோறும் 6 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பராமரிப்பு செலவுகளை வில்லியம்சன் மாகோர் டீ நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கால்நடை மருத்துவர் குஷால் கோன்வர் சர்மா மேற்பார்வையில் யானை பிஜூலி பிரசாத்திற்கு உடல்நிலை குறித்த பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டது.
முன்னதாக கர்நாடகாவைச் சேர்ந்த சாமுண்டா பிரசாத் என்ற வயதான யானை 82 வயதில் இறந்ததை அடுத்து பிஜூலி பிரசாத் யானை நாட்டின் அதிக வயதான யானையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிஜூலி பிரசாத் மரணம் அடைந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையில் பார்காங் வனத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனையை தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. டெல்லி அரசு அதிகாரி பணியிடை நீக்கம்.. முதலமைச்சர் உத்தரவு!