மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, அவருக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பாரதியாரின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், ஸ்டாலின் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி வரும் காலங்களில் பாரதியாரின் நினைவு நாள் - 'மகாகவி நாள்' என்று அனுசரிக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதியார் பற்றி பெருமிதத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"சிறப்புவாய்ந்த சுப்பிரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவுகூருகிறோம்" என்று.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, மகாகவியைப் பெருமைப்படுத்தும்விதமாக நரேந்திர மோடியின் புதிய அறிவிப்பு ஒன்று தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அறிவிப்பு:
- "இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும்" என்பதே.
பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரியில் பாரதி பூங்காவில் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம், தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனிஜெயகுமார் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 - ஆதாரங்களை அடுக்கும் தமிழ்ப் பேராசிரியர்