ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கண்ணுமுரி ராம கிருஷ்ண ராஜு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரிடமிருந்தும், ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவர்களிடமிருந்தும் தனக்கு மிரட்டல் வருவதாகக் கூறி தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும், தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து கடிதத்தில் விவரித்துள்ள அவர், இது தொடர்பாக தனது உதவியாளர் மேற்கு கோதாவரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் மணல் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகள், வீட்டுமனை, சமூகநலத் திட்டங்களில் உள்ள ஓட்டைகள் குறித்து கண்ணுமுரி ராம கிருஷ்ண ராஜு தொடர்ந்து புகார் எழுப்பிவந்தார். இதனால் அவர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களும், ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்களும் கடுங்கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசும், ஒய்எஸ்ஆர் கட்சியினரும் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அம்மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார், மத்திய உள் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நொய்டா 50ஆவது செக்டார் மெட்ரோ ரயில் நிலையம் திருநங்கைகளுக்கு அர்ப்பணிப்பு!