கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் களரி கலையில் புரிந்த சாதனைக்காக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாரம்பரியமாக களரிப் பயிலும் குடும்பத்தில் பிறந்த அரோமல், இரண்டு வயதிலேயே தனது தந்தையிடம் களரி பயிற்சியை கற்கத் தொடங்கினார். அவரது தாயார் களரி பயிற்சியை கற்பிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளவர். இளம் வயதிலேயே களரியில் பெரும் ஈடுபாடு கொண்ட அரோமல், தொடர்ச்சியாக இக்கலையில் பயிற்சி மேற்கொண்டு களரிப் போட்டிகள் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றார்.
தனது தாய், தந்தை, சகோதரி என அனைவரும் இத்துறையில் ஈடுபட்டதால், இந்த கலையில் இயல்பான ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார் அரோமல். மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளைப் பெற்றுள்ள இவர், தொடர்ச்சியாக 5 மணிநேரம் 4 நிமிடம் உருமி என்ற சுருள்கத்தி வீச்சு கலையை நிகழ்த்திக்காட்டி தற்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உடற்திறனை மேம்படுத்தும் களரிக் கலையை 150க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ஆலப்புழாவில் உள்ள பயிற்சிப்பள்ளியில் கற்பிக்கிறார் அரோமல். மேலும் பல்வேறு விளையாட்டு வீரர்களும் தன் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி எடுத்துக்கொள்வதாக அரோமல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விருதுநகரில் தொடரும் சாதி கொடுமை - பட்டியலின மக்கள் உரிமை கேட்டு போராட்டம்