கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அமைச்சர் கே.டி.ஜலீல், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் முன்னணி தரப்பில் சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் அம்மாநில அமைச்சர் கே.டி.ஜலீல் சம்மந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) கேரள சட்டப்பேரவை வளாகம் முன்பாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் முன்னணி சார்பாக கே.டி. ஜலீல் அமைச்சர் பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இது குறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில், அமைச்சர் ராஜினாமா செய்யும்வரை ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் செப்.11ஆம் தேதி, அமலாக்கத் துறையினர் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங்