உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 1, 071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதாரத் துறை உறுதிசெய்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகள், கட்டுமானத் திட்டங்களில் பணிபுரியும் தினசரி கூலிகளின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், அவர்கள் வசிப்பிடங்களைவிட்டு காலி செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த மாநிலங்களை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் நடந்தே செல்லும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் மக்களைச் சென்றடைய அரசாங்கம் தனது சொந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதே வேளையில், இளைஞர் காங்கிரஸ் தனது பங்கைச் செய்து, வறியவர்களுக்குத் தேவையான சுத்தமான பொருட்கள் கிடைக்க உறுதிசெய்கிறது. இந்த மக்கள் நலன் அடைவதற்காக எல்லோரும் இணைந்து செயலாற்றுவோம். இந்திய இளைஞர் காங்கிரஸ் நாடு முழுவதும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வறிய மக்களுக்குத் தேவையான மருத்துவ பொருள்கள், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள், மளிகைப் பொருள்கள், உணவு மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறார்கள்"
இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ் கூறுகையில், "மாவட்ட, மாநில, தேசிய அளவில் உள்ள அனைத்து இளைஞர் காங்கிரஸ் செயல்பாட்டாளர்களும் அரசாங்கத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி சமூக இடைவெளி உள்ளிட்ட இன்ன பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அயராது உழைத்து வருகின்றனர். இந்த முன்முயற்சியின் பின்னணியில் அரசியல் இல்லை. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆதரவற்றோரின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : புலம்பெயர்ந்தவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்யக்கோரிய மனு மீது இன்று விசாரணை