உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான விகாஸ் துபேவை பிடிப்பதற்காக அவர் பதுங்கியிருந்த இடத்துக்கு ஜூலை 2ஆம் தேதி 50 பேர் கொண்ட காவல் துறையினர் சென்றனர். அப்போது, விகாஸ் துபே அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், சர்கில் அலுவலர் தேவேந்திர மிஷ்ரா உள்பட எட்டு காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து இந்தியன் இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நேற்று (ஜூலை 8) போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தவலறிந்து நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர்.
இதனிடையே இந்தியன் இளைஞர் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், "எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, அதிருப்தி ஆகிவற்றை கண்டு உத்தரப் பிரதேச அரசு அச்சமடைந்துள்ளது. பாஜகவின் அறிவுறுத்தலால் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இது கண்டிக்கத்தக்கது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.