திபேத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாள் ஜூலை 6ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்பாகவே, ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலம், அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு நாடு கடந்த திபேத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அவரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை உலகம் முழுவதும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடு கடந்த திபேத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், "உலகம் முழுவதும் வாழும் திபேத்தியர்கள் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஓராண்டு காலம் கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை பயன்படுத்தி அவரின் போதனைகளை பரப்ப உள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய திபேத்திய நிர்வாகத்தின் தலைவர் லோப்சாங் சாங்காய் கூறுகையில், "கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி ஜூலை 6ஆம் தேதி அவரது பிறந்தநாள் அன்று இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் உள்ள திபேத்திய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில், 50 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 93 வயதில் கரோனாவை வென்ற முன்னாள் குடியரசுத் தலைவரின் மனைவி!