நாட்டின் 28ஆவது ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்றார்
இந்திய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்டு வந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே டிசம்பர் 31ஆம் தேதி பதவியேற்றார்.
முப்படை தலைமை தளபதியாக பதவியேற்ற பிபின் ராவத்
ராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத்தை, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து பிபின் ராவத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி, முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக அவர் பதவியேற்றார்.
நாட்டின் தூய்மையான நகரம் இந்தூர்: தொடர்ந்து 4ஆவது ஆண்டாக சாதனை
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்று கொள்ள மாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, அச்சட்டத்திற்கு எதிராக முதல் மாநிலமாக கேரளா தீர்மானம் நிறைவேற்றியது.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ-வின் இரண்டாம் ஏவுதளம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் தற்போது இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. மேலும், ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு தகுந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினத்தை தேர்வு செய்தது.
உலகின் இரண்டாவது உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, 'ஒற்றுமைக்கான சிலை' - ஐ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31ஆம் தேதி திறந்து வைத்தார்.
லக்னோவில் 11ஆவது ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்த மோடி
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி 9 வரை நடைபெற்றது.
107 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில், 107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய அறிவியல் மாநாட்டு தலைவர் கே.எஸ். ரங்கப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடைபெற்ற உலக புத்தக கண்காட்சி
டெல்லியில் 28ஆவது உலக புத்தக கண்காட்சி ஜனவரி 4 தொடங்கி 12 வரை நடைபெற்றது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, கனடா, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் அதில் பங்கேற்றனர்.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி
ஒடிசா மாநிலம் கட்டக்கில் முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளை பிப்ரவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டில் விளையாட்டு போட்டிகளை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் கரோனா பாதிப்பு
ஜனவரி 30ஆம் தேதி, இந்தியாவில் முதல் கரோனா பாதிப்பு கேரளாவில் உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த கேரள மாணவர், தனது சொந்த ஊரான திருச்சூர் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் கரோனா உயிரிழப்பு
மார்ச் 13ஆம் தேதி, இந்தியாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கர்நாடக மாநிலத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்தது. சவுதி அரேபியாவிலிருந்து கர்நாடகாவிற்கு திரும்பிய 76 வயது முதியவர் உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை அறிவித்த ராஜஸ்தான்
கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் ஊரடங்கை அமல்படுத்தியது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 18ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
மார்ச் 22ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு
கரோனாவுக்கு எதிரான போரின் முதல் நடவடிக்கையாக மக்கள் தானாக முன்வந்து ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரவர் வீட்டின் நுழைவுவாயில்களில் நின்று அப்போது மக்கள் கைதட்டினர்.
நாட்டையே முடக்கிய 21 நாள் ஊரடங்கு
கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24 தொடங்கி 21 நாள்களுக்கு நாடு முடக்கப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதையடுத்து, அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த சட்டம்
குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை - அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
நாடாளுமன்ற புதிய கட்டிடம்: அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து, 971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மூன்றாவது முறையாக டெல்லியை கைப்பற்றிய ஆம் ஆத்மி
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, பிப்ரவரி 16ஆம் தேதி, டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆட்சியை தக்க வைத்த நிதிஷ்குமார்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் கரோனா பரவலுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. 243 இடங்களை கொண்ட பிகார் சட்டப்பேரவையில் 125 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் நவம்பர் 16ஆம் தேதி ஏழாவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி கலவரம்; 53 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. பிப்ரவரி 23ல் தொடங்கி 29 வரை நடைபெற்ற கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டின் தலைநகரமே ஸ்தம்பித்தது.
பெங்களூருவை உலுக்கிய பேஸ்புக் பதிவு
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன், தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டார். இதனால், அப்பகுதி மக்கள் அகந்த சீனிவாஸின் வீட்டினை முற்றுகையிட்டனர். அது திடீரென கலவரமாக மாறியது. இதில், மூவர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி காலமானார். அவருக்கு 2019ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் மத்திய வெளியுறவுத் துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
காற்றில் கலந்த பாஸ்வான்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். ரசாயனம் மற்றும் உரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் அவர் பதவிவகித்துள்ளார்.
அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார்
அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் நவம்பர் 23ஆம் தேதி காலமானார். 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை, தொடர்ந்து மூன்று முறை அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசின் கீழ், மாநில உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி காலமானார்
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி மாரடைப்புக் காரணமாக மே 29ஆம் தேதி காலமானார். மார்வாஹி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜோகி, 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள தங்க கடத்தல்
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தலுக்கும் மாநில அரசின் உயர் மட்ட அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்தது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மார்ச் 20ஆம் தேதி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் முகேஷ், வினய், அக்ஷய், பவன் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். மீரட் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்ட 'பவன் ஜலாத்' குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார். அவர்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் கொடூரம்: மனதை பதறவைத்த ஹத்ராஸ் சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதியன்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய அப்பெண், 15 நாள்கள் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது, சிபிஐ விசாரித்துவருகிறது.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 30ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு, 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழி கல்வி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
கல்வான் மோதல்: இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த ஜூன் 15, 16 தேதிகளில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஆம்பன் புயல்: 100 பேர் உயிரிழப்பு
இந்தியா கடல் பகுதியில் உருவான ஆம்பன் புயல் இந்திய-வங்கதேச எல்லை வழியாக மே 21ஆம் தேதி கரையைக் கடந்தது. இந்தப் புயலால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்!
பிரான்ஸிடம் இருந்து மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல் கட்டமாக, 5 விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஜூலை 29ஆம் தேதி வந்தடைந்தன. இவை 2 ஆயிரத்து 222 கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
வடமாநிலங்களை உலுக்கிய வெட்டுக்கிளி தாக்குதல்
வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட 10 வட மாநிலங்களில் பயிர்கள் சேதமடைந்தன.
சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, ஜூன் 29ஆம் தேதி 59 சீன செயலிகளை மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்தது. கல்வான் மோதலை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையே, பதற்றம் நிலவி வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணிகளை நிறுத்திக் கொண்ட அம்னெஸ்டி அமைப்பு
சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி, இந்தியாவில் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வதாக செப்டம்பர் 29ஆம் தேதி அறிவித்தது. அதற்கு முன்பாக அம்னெஸ்டி அமைப்பின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
கட்சி தாவிய சிந்தியா; முதலமைச்சரான சிவராஜ் சிங் சவுகான்
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே அம்மாநில முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக, மத்தியப் பிரதேச முதலமைச்சராக மார்ச் 24ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் செப்டம்பர் 17ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்திலுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அவர் கலந்து கொண்டார். .
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழு தலைவர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் ரியாஸ் நைகூவை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஹிஜ்புல் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த அவர், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார். தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மே 6ஆம் நடைபெற்ற என்கவுன்டரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை விபத்து; 11 பேர் உயிரிப்பு
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில், எல்.ஜி. பாலிமர்ஸ் தனியார் ரசாயன தொழிற்சாலையில் மே மாதம் 7ஆம் தேதி, ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிவு காரணமாக சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
அஸ்ஸாம் எரிவாயு கசிவு; 5 மாதங்களாக பற்றி எரிந்த தீ
அஸ்ஸாம் மாநிலத்தின் பாக்ஜானில் மொத்தம் 23 எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இதில் பாக்ஜான் 5ஆம் எண் எண்ணெய்க் கிணற்றில், ஜூன் 9ஆம் தேதி, கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 5 மாதங்களுக்கு மேலாக எரிந்த தீ, நவம்பர் 5ஆம் தேதி முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா நிசர்கா புயல்; 6 பேர் உயிரிழப்பு
அரபிக்கடலில் உருவான 'நிசர்கா' புயல், ஜூன் 4ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். புயலில் சிக்கி 2,288 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன.
சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 28ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். நாடாளுமன்றத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக நாடு தழுவிய அளவில், டிசம்பர் 8ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
மகேந்திர சிங் தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் ஜூன் 14 ஆம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோழிக்கோடு விமான விபத்து: 19 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு தரையிறங்கிய 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் ஓடுபாதையிலிருந்து விலகியதால் விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்து விழுந்த விமானம் இரண்டாக உடைந்தது. இதில், தலைமை விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி 55 உயிரிழந்தனர்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சரிவில் சிக்கினர். இதில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் பல முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்தவரும், பாஜக கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் செப்டம்பர் 27ஆம் தேதி காலமானார். வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்த அவர் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தார்.