உலகளவில் மிகப்பெரிய அஞ்சல் சேவையான இந்தியா போஸ்ட், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களை கொண்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் உள்ள மக்களின் வீட்டு வாசல்களுக்கே அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு 4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காலகட்டத்தில், ஒரு நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பொருள்கள் மக்களின் வீட்டு வாசல்களில் விநியோகம் செய்யப்படுகின்றன.
பொருள்கள் மட்டுமின்றி உயிர் காக்கும் முக்கியமான மருந்துகள்,கரோனா சோதனைக் கருவிகள், உணவு ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. இதற்காக, 500 கிலோமீட்டருக்கு சிறப்பு சாலை கொண்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வரைபடமானது, நாடு முழுவதும் 75 நகரங்களைத் தொடும் 22 நீண்ட பாதைகளைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்களை விரைவாக மக்களுக்கு ஊழியர்கள் வழங்கி வருகிறார்கள்.
மேலும் இந்தியா போஸ்ட், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து கோவிட் -19 சோதனை கருவிகளை நாடு முழுவதும் உள்ள 200 கரோனா ஆய்வகங்களுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா போஸ்ட் கூறுகையில், "கொல்கத்தா, ராஞ்சி, பாட்னா, ஜோத்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர், இம்பால், ஐஸ்வால் ஆகிய பகுதிகளுக்கு பொருள்களை விநியோகம் செய்துள்ளோம். கருவிகளை உலர்ந்த பனியில் நிரப்பி வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகிறது" என்றனர்
ஊரடங்கில் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் சேமிப்பு கணக்கு மூலம் 23 ஆயிரம் கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏபிஎஸ் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது . எனவே, மக்களுக்கு கடினமான காலத்தில் சேவை செய்வதில் இந்தியா போஸ்ட் முக்கிய பங்கு வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் சிறப்பு ரயில் சேவை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி!