அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி, "நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகள். வறுமை ஒழிப்பில் அவரின் பங்கு மகத்துவமானது. எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி, "வறுமையை ஒழித்து இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட ’நியாய்’ திட்டத்தினை வகுக்க உதவியவர் அபிஜித். ஆனால், தற்போதுள்ள மோடினாமிக்ஸ் இந்தியப் பொருளாதாரத்தை சூரையாடுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "இன்று அனைத்து இந்தியர்களுக்கும் சிறந்த நாள். பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமை ஒழிப்புக்கு தற்போது ஊக்கம் கிடைத்துள்ளது" எனப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வறுமை ஒழிப்பு குறித்த அவரின் ஆய்வால் இந்தியா பெருமைப்படுகிறது. சிறந்த பொருளாதார நிபுணரான அவரிடம் ’நியாய் திட்டம்’ குறித்து ஆலோசிக்கப்பட்டது" எனப் பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அபிஜித் கொல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் பயின்றவர். மற்றொரு பெங்காளி நாட்டினைப் பெருமைப்படுத்தியுள்ளார்" எனப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: நோபல் வென்ற இந்தியர் - அபிஜித் பானர்ஜி!