புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "துணை நிலை ஆளுநர் முழுமையாக பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார். புதுச்சேரி மாநில மக்களை பற்றியும், மாநில வளர்ச்சி பற்றியும் அவருக்கு கவலையில்லை. மாநில வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அக்கரை இல்லை. அதிகாரமே இல்லாமல் எல்லா அரசின் முடிவுகளில் தலையிடும் வேலையை துணை நிலை ஆளுநர் பார்க்கிறார். இதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் முடிவு செய்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று எங்களுடைய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தொடர்ந்து நேற்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்துக்கான இடங்கள் மருத்துவக் கழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஒதுக்கி கொடுக்கப்படும். அதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் போலி சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாநில இடஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஜிப்மர் நிர்வாக தலைமை அலுவலர் ராகேஷ் அகர்வாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுமையாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். வெளிமாநிலத்தவர் போலி சான்றிதழ் மூலம் வந்தால் அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன். அவரும் அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு அந்த இடம் கொடுக்கப்படும். இல்லை என்றால் கண்டிப்பாக மறுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இது சம்மந்தமாக விசாரணை செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். அவரும் விசாரணை செய்து முடிவெடுப்பார். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை, நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஜிப்மரில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும், நம்மாநில இட ஒதுக்கீட்டில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுசம்மந்தமாக மத்திய மருத்துவக் கழகத்துக்கும் நான் கடிதம் எழுத இருக்கிறேன். புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை எங்களுடைய மாநில குடியுரிமை அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறுவேன்" என தெரிவித்துள்ளார்.