குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி பங்கேற்றார்.
அப்போது மேடையேறிய அமுல்யா என்ற பெண், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமுல்யாவின் செயலுக்கு ஓவைசி அப்போதே தனது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
அதேபோல, பல வலதுசாரி அமைப்புகளும் அமுல்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், அமுல்யாவின் செயலைக் கண்டித்து வலதுசாரி அமைப்பான இந்து ஜாகரன் வேதிகே என்ற அமைப்பு பெங்களூருவிலுள்ள டவுன் ஹாலில் இன்று போராட்டம் நடத்தியது.
போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் 'பாகிஸ்தான் முக்தி', 'தலித் முக்தி', 'இஸ்லாம் முக்தி' உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பதாகையை பெண் ஒருவர் ஏந்தி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பெண்ணை சூழ்ந்துகொண்ட இந்து அமைப்பினர், அவரைத் தாக்க முற்பட்டனர். அவர்களிடமிருந்து அப்பெண்ணைக் காப்பாற்றிய காவல் துறையினர், விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உடனடியாக அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் காவிலில் வைக்க நீதிபதி உத்தவிட்டார். மேலும், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷமிட்ட மாணவிக்கு நக்சல்களுடன் தொடர்புள்ளது - கர்நாடக முதலமைச்சர்