உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா 63ஆவது செக்டார் பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இப்பூங்காவில் 21 வயதான இளம்பெண் ஒருவர் நவம்பர் 15ஆம் தேதி ரவி என்பவரை சந்தித்தார். அப்போது ரவி வேலை வாங்கித் தருவதாக அப்பெண்ணுக்கு வாக்குறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு திபுதிபுவென வந்த 5 பேர், அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.
பாதிக்கப்பட்ட அப்பெண் நொய்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, ரவி உள்பட நான்கு பேரை கைது செய்தனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து இரண்டு பேர் தப்பிவிட்டனர். அவர்களைக் காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் அப்பகுதியிலுள்ள காய்கறி சந்தையில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் மீது காவலர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை), 354 (குற்ற நோக்கத்தோடு பெண்ணை தாக்கி காயப்படுத்துதல்), 511 (ஆயுள் உள்ளிட்ட சிறை தண்டனை அளிக்கும் குற்றங்களைச் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து கவுதம் புத்தா நகர், மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா கூறும்போது, "வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து அப்பெண்ணை பூங்காவிற்கு ரவி அழைத்துள்ளார். ரவியின் பேச்சைக் கேட்டு பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது ஆறு பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
தலைமறைவாகவுள்ள மற்ற இரு குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் அளித்தால், தகவல் அளிப்போருக்கு சன்மானமாக ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நொய்டாவில் பாடகி சுஷ்மாவை கொலை செய்த 6 பேர் கைது!