டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டிவரும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக ஜனவரி 3ஆம் தேதி 'மேரி டெல்லி, மேரா சுஜாவ்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. இதில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற விரும்பும் கருத்துகளை மக்கள் தெரிவிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியின் மேடையில்தான், ஒரு அபலைப் பெண்ணின் தாயார் மேற்கு டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேடையில் அவர் கூறுகையில், "மேற்கு டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர், எனது 22 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் ஷ்யாம் ஜாடூ, டெல்லி பாஜக பொதுச்செயலாளர் சிந்தார்த்தன் ஆகியோருக்கும் எனது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துத் தெரியும். ஆனால், சொந்தக் கட்சியினருக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்காவிட்டாலோ, டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் பாஜக அவருக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்தாலோ, நான் எனது மகளுடன் தீயிட்டு தற்கொலை செய்து கொள்வேன். இதுகுறித்து டெல்லி காவல் துறையிடம் புகாரளித்துள்ளோம். ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்" என்றார்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் தாய் மேடையில் பேசத் தொடங்கியதுமே அருகிலிருந்த மற்ற பாஜக தலைவர்கள் அவரைத் தடுக்க முற்பட்டனர். ஆனாலும், அவர் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.
இதையும் படிங்க: மே.வங்க இடதுசாரிகளுக்கு சித்தாந்தம் இல்லை, கேரள இடதுசாரிகள் சிறந்தவர்கள் - மம்தா சாடல்!