மியான்மர் நாட்டின் எல்லையோரப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தின் சந்தல் மாவட்டம் உள்ளது. இந்நிலையில், மணிப்பூரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பல உள்ளூர் பிரிவினைவாத அமைப்புகள் நீண்ட காலங்களாகப் போராடிவருகின்றன. அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள அப்பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியிலிருந்த அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவினர் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனம் சந்தல் மாவட்டத்தில் சாஜிக் தம்பிக் பகுதி வழியாக சென்றபோது, அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியால் வாகனம் பழுதடைந்துள்ளது.
இதையடுத்து, வீரர்கள் மீது பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தது மட்டுமின்றி 5 வீரர்கள் படுகாயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.