பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதிகள் அவ்வப்போது நுழைந்து சண்டையிடும் எல்.ஓ.சி பகுதியும், சீனாவுடன் சண்டையிட்ட கிழக்கு லடாக் பகுதியிலும் இந்திய ராணுவ படை உஷார் நிலையில் உள்ளது. இச்சமயத்தில் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) உயர்மட்ட அலுவலர்கள் நேரில் சந்தித்து இன்று (ஜூலை 22) முதல் உரையாடவுள்ளனர். அதில், தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.டி.பி.பி (Long Term Perspective Plan) 2012-2027இல் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பை ஜூலை 22 முதல் 24 வரை தேசிய தலைநகரான வாயு சேனா பவனில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்படும் இரண்டு விதமான மோதல் சூழ்நிலையை கையாள்வது மட்டுமின்றி ஐ.ஏ.எஃப் சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது, போர் விமானப் படைகளின் பற்றாக்குறை, சிறப்புப் படைகளை நிலைநாட்ட ஏர்லிஃப்ட் திறனை மேம்படுத்துதல், ஆளில்லா வான்வழி வாகனங்கள் தேவை போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
குறிப்பாக, போர் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக முக்கியமான தேவை. தற்போது, ஐ.ஏ.எஃப்பில் 33 படைப்பிரிவுகளை இயங்கி வருகிறது. அதே நேரத்தில், சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளையும் ஒரே நேரத்தில் மோதக்கூடிய சூழ்நிலையில் எதிர்த்துப் போராட குறைந்தபட்சம் 45 படைப்பிரிவுகளுடன் IAF தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு போர் படைகளிலும் 16 முதல் 18 விமானங்கள் இயக்குகின்றன. Su-30 சீரிஸ், மிக் -29 சீரிஸ், மிராஜ் -2000 ஆகிய விமானங்கள் இந்திய விமானப் படையின் முன்னணி போர் விமானங்களாக வலம் வருகிறது. இதுமட்டுமின்றி தேஜாஸ் லைட் காம்பாட் விமானத்தின் 83 எம்.கே 1ஏ மாடலை வாங்கும் பணியில் ஐ.ஏ.எஃப் ஈடுபட்டு வருகிறது.
மேலும், பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால், 10 நாள்கள் நிச்சயம் போர் நீடிக்கும். அதே சமயம், சீனாவுடன் போரிட்டால் 15 நாட்கள் வரை கூட போர் நீடிக்க வாய்ப்புள்ளது என விமானப்படை ஆய்வு இயக்குநரகம் (DASI) தெரிவிக்கிறது. எப்போதும் தயார் நிலையில் ஆயுதங்கள், ஏவுகணைகள், எச்சரிக்கை ரேடார் அமைப்புகளை வைத்திருப்பது அவசியமாகும். ஐ.ஏ.எஃப்பில் உள்ள பணியாளர்கள், விமானங்களைப் கணக்கிடுகையில் உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக பெயர் பெற்றுள்ளது.