சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவருகிறது. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கல்வியில் இஸ்லாமியர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக் அறிவித்திருந்தார்.
"இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை, என்னிடம் எடுத்துவரப்பட்டால் அதன் சட்ட வரையறை குறித்து ஆலோசிக்கப்படும்" என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி கூட்டணியிலிருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விலகினால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்போம் என மூத்த பாஜக தலைவர் சுதீர் முங்கண்டிவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற கருத்தை எங்கள் கட்சி கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிவசேனா சரியான நிலைபாட்டை எடுத்துள்ளது. அரசியலமைப்பை சிவ சேனா சரியாக புரிந்து கொண்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது" என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா : ஒரே ஆண்டில் 5,727 பேரை பலிகொண்ட புற்றுநோய்!