கரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைய உள்ள நிலையில், மே 3ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் நடமாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத ஊரடங்கு உத்தரவால் வேலைகளுக்காக வெளி மாநிலங்கள் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர்.
இதனால் வீட்டில் நடக்கும் சுபதுக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தெலங்கானாவில் தனது கணவருக்கு இறுதிச்சடங்கை செய்ய மகன் வர முடியாததால், மனைவியே அனைத்து சம்பிரதாயங்களையும் செய்தது அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டைச் சேர்ந்தவர் லசுமம்மா. இவரது கணவர் வேதாந்தி ராமுலு உடல்நலக் குறைவால் காலமானார். இந்து மத முறைப்படி அவரது மகன் கனகய்யாவே ஈமக் காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் ஊரடங்கால் குஜராத் மாநிலம் சூரத்தில் சிக்கிக்கொண்டார். தந்தையின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்துகொள்ள முடியாததால், அவருக்குப் பதிலாக தாயார் லசுமம்மா ஈமக் காரியங்களைச் செய்தார்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் கனகய்யா வீடியோ காலில் பார்த்து சோகத்தில் மூழ்கினார். கணவரை இழந்த சோகம் ஒருபுறம், ஊரடங்கால் வேறு ஊரில் சிக்கிக்கொண்ட மகனைப் பார்க்க முடியாத கவலை மறுபுறம் சூழ்ந்து கதறி அழுத லசுமம்மாவை பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.